கதை 01


கறுப்புக்கனவு

பொழுது சாயும் நேரம் வானம் கறுத்து இருள் மெது மெதுவாய் சூழத்தொடங்கியது.  கொஞ்சம் இருட்டி விட்டாலே முழுதாய் இருள் கவிந்துவிடும் கிராமம் அது. வாழை, மா, பலா என முக்கனிகளும் நன்கு விளையும் பூமி அது. விவசாயம் செய்யாத மனிதர்களே அந்தக்கிராமத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயிர்கள் நிறைந்து வழியும்.  பச்சை வயலும் வரப்போடு பாயும் தண்ணீரும் ஆகா எத்தனை இன்பம். பாதங்கள் வரப்போடு நடந்தாலும் நினைவுகளும் மனதும் வயலின் வாசனையைதான் நுகரும்.

அன்று சனிக்கிழமை வினுஜன் வழமைபோல் அதிகாலை எழுந்துவிட்டான்.  சிறிதாய் அசதி சேர்த்த சோம்பலை விலக்கிக் கொண்டு வெளியே வந்தான். ஒரு கையில் பற்பொடியை கொட்டினான் வலது சுட்டு விரலினால் பொடியை தொட்டு பல் துலக்க ஆரம்பித்தான். இதுதான் கிராமத்தின் சுவையான பல்துலக்கல். பல் துலக்கிய வண்ணம் கிணற்றின் அருகே வந்து சேர்ந்தான். கிணற்றில் நீர் மோண்டு வாய் கொப்பளித்து முகம், கை, கால் அலம்பிக் கொண்டான். கொடியில் தொங்கிய துவாயினால் முகம் துடைத்துவிட்டு வரவும் அவன் தாயார் சரஸ்வதி வெளியே வரவும் சரியாக இருந்தது.


சரஸ்வதி கலைந்த அவள் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே அடுக்களையுள் நுளைந்தாள். மண்ணால் மெழுகிய அடுப்பினுள் சாம்பலை வெளியே தள்ளி நடுவே சிறட்டையினை வைத்து மேலே விறகினை அடுக்கி சிறு சுள்ளிகளையும் சேர்த்து மண்ணெண்ணை ஊற்றி அடுப்பை பற்றவைத்தாள். கேத்தலில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தாள். தண்ணீர் கொதிப்பதற்குள் முகம் கழுவி வர கிணற்றடிக்கு சென்றாள். அவள் தன் பணிகளை முடித்து வர தண்ணீரும் தயார் ஆனது தேனீருக்காய். 

தாயார் ஊற்றும் தேனீரை பருகு முன் வினுஜன் தன் வேலைக்கான ஆயத்தம் செய்தான். மண்வெட்டி, கத்தி என தன் தோட்டத்தில் வேலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான்.
     " வினு... இந்தாப்பு தேத்தண்ணி.... காலம சாப்பிடுறதுக்கு கந்தப்பு கடையில பத்து  இடியப்பம் வாங்கிக் கொண்டு போ என..."
  
         "வேண்டாமனே .... பழைய சோறு இல்லையா .... "

        " கிடக்குது தான்... எந்த நாளும் அத தானே சபிடுராய் இன்டைக்காச்சும் இடிப்பத்த சாபிடனப்பு..."  

     " இல்லை அம்மா.... அது தான் உடம்புக்கு நல்லது... அதுமட்டும் இல்லயனே.. என்னோட  கனவுகள் நனவாகும் வரை சில விடயங்களை தள்ளி வைச்சுத்தான் ஆகனும்..."

என தாயின் பரிவான பேச்சுக்கு பதில் கொடுத்தான். அவன் கனவுகளை உடைக்க விரும்பாத சரஸ்வதி பழைய சோற்றிற்கு கொஞ்சம் ஊறுகாயும், வென்காயமும் சேர்த்து சுவையூட்டி கொடுத்து அனுப்பினாள். 

அப்படி என்ன பெரிய கனவு? வினு, அவன் சின்ன வயதிலேயே தனது தந்தையை இழந்து விட்டான். ஆட்கொள்ளி நோயான புற்றுநோயால் தான் அவன் தந்தையை பறிகொடுத்தான். அவன் தாய் சரஸ்வதியின் உழைபு மட்டுமே அவர்கள் குடும்பத்தை ஓட்டியது. தற்போது தான் அவனுக்கு அவன் தந்தையின் நோய் பற்றி தெளிவான விளக்கம் கிடைத்தது. அதான்ல்தான் அவன் ஒரு முடிவுக்கு வந்தான் தன்னால் முடிந்தரை உழைப்பது அத்தோடு படிப்பது என்று. அதுதான் தன் கனவு இலட்சியம் என்றும் திடசங்கற்பம் எடுத்துக்கொண்டான்.


சிறிதாய் ஆரம்பித்த அவனது தோட்டம் இப்போது மெது மெதுவாய் வளர்கிறது. தோட்டத்தின் விளைபொருட்களை விற்கும் முயற்சியில் கடுமையாய் உழைத்தான். சிறிதாய் ஒரு மரக்கறிகளை விற்பனைசெய்யும் கடை ஒன்றை ஆரம்பித்தான். அதனை அதிக நேரம் சரஸ்வதியே கவனித்தாள். ஓய்வு நேரங்களில் வினு கவனிப்பான்.
 
மறுபுறம் அவனது படிப்பிலும் மிகுந்த அக்கரை காட்டினான் அவனது படிப்பு உயர்தரம் தாண்டிச்செல்ல வியாபாரம், பயிர்செய்கையும் வெகுவாய் வளர்ந்து விட்டது. சமாந்தரமாய் அவன் வியாபாரத்தை பெருக்கும் முயற்சியில் அவன் வெற்றிகண்டு கொண்டிருந்தான். உயர்தரத்தில் கிடைத்த சிறந்த பெறுபேறால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. பட்டப்படிப்பை ஆரம்பித்த பின்னர் தனது வியாபாரத்தை கவனிப்பதில் அவன் தாயார் துணைக்கு நின்றார்.
 
நான்கு வருடங்கள் உருண்டு ஓடியது. பட்டப்படிப்பு முடிவடையும் நிலையில் அவன் வியாபாரம் பெரிய அளவில் வளர்ந்த விட்டது. பலரிற்கு வேலைவாய்ப்பும் வழங்கியிருந்தான். தோட்டம் தற்போது பண்ணையாக மாறிவிட்டது. பயிர்கள், விலங்குகள், பதப்படுத்தல் என பல தொழில்வாய்ப்புக்களையும் தன்னகத்தே வளர்த்துக்கொண்டிருந்தான்.
 
நாளை அவன் பட்டமளிப்பு விழா மறுநாள் அவன் புதிதாய் ஆரம்பித்த வியாபார கம்பனியின் திறப்பு விழா. அழகிய பட்டமளிப்பு விழாவை பார்த்து  ரசித்த சரஸவதி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். பழைய காலத்தை என்னி மெதுவாய் புன்னகைத்துக் கொண்டாள். தன் பிள்ளையின் விடா முயற்சியினையும் அதன் வெற்றிகளையும் எண்ணி அகமகிழ்ந்து கொண்டாள்.
 
தன் பிரதான இலட்சியம் புற்றுநோய் வைத்தியசாலை கட்டுமுவதே என்பதை அன்று தான் அவன் தாயிடம் சொன்னான். அதற்கான நிதியை சேமிக்கவே இத்தனை வியாபாரம் என்றும் சொன்னான்.
 
   " உன்னோட எத்தனையோ சந்தோசங்களின்ட தியாகம் இவ்வளவு பெரிய இலட்சியத்துக்கு தான் என்டது இன்டைங்கு தான் எனக்கு விளங்கிச்சுதப்பு.... உன்ன பிள்ளையா பெத்ததில ரொம்ப பெருமை படுரன் ராசா.."
 
   என பெருமிதம் கொண்டாள் சரஸ்வதி. வர்த்தக பட்டதாரியாக பட்டத்தினை பெற்று. மறுநாள் விழாவினை நோக்கி பயனிக்கிறது அழகிய கனவுகள். சாலையில் வேகமாய் பயனிக்கிறது வாகனம். இருட்டிவிட்டது சாரதியின் கண்கள் மெதுவாய் செருகுவதை உணர்ந்தான். சற்று வாகனத்தினை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் புறப்படுகின்றது.
 
நித்திரையின் சுகம்போல் ஏதும் இல்லை என்பார்கள். வருவது தெரியாமல் வரும் உறக்கம், அப்படித்தான் அந்தக்கணம் அமைந்தது. ஒரு நொடி உறங்கி விழிக்கும் நிலையில் நிலைதடுமாறிய சாரதி பாதையினை விட்டு வெளியே செலுத்திவிட்டான் வாகனத்தை. தடுமாறிய வாகனம் மரமொன்றில் மோதியது. பரிதாப மரணங்கள் காத்துக்கிடந்தது.
 
கண்விழித்த சரஸ்வதி தான் எங்க இருக்கிறேன் என்பதை உணர்கின்றாள். வைத்தியசாலையில் கண்ணுக்கு எட்டிய தூரமெலாம் தேடுகின்றாள் மகனை. அருகே ஒரு கை அணைக்கின்றது.
 
" அம்மா.. என்ன தேடுறிங்க... "
அந்த கருணை உருவம் கண்ணீர் வடிக்கின்றது...
 
" அம்மா ... வினு எங்கள விட்டிட்டு பொயிற்றான்...."
 
விபத்தில் தப்பியது சரஸ்வதி மட்டுமே என்பது விளங்கியபின், பலத்த அழுகுரல் மட்டுமே நிறைந்து ஒலித்தது.
 
காலம் உருண்டு ஓடுகின்றது. வினுவின் கனவுகள் கறுப்பாய் போனதை என்னி கண்ணிர் விடுகின்றாள் சரஸ்வதி. அவன் கனவுகளை வர்ணமாக்க இன்னமும் உயிர்க்கின்றாள். தொடர்ந்தும் உழைக்கின்றாள். வெற்றி காணுவாள்... நிச்சயம் வெற்றிகாணுவாள்.....
 
உறங்காத வினுவின் இரவுகள்....
சாரதியின் உறங்கிய கணங்களால் கலைந்து போனது.
விபத்துக்கள் தானாய் உருவாவவதில்லை
நாங்களாய் உருவாக்குகின்றோம்.....
 
 - முற்றும் -